ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்வோம்: மத்திய-மாநில அரசுகளை விமர்சனம் செய்வதற்கான நேரம் கடந்து விட்டது - கமல்ஹாசன் பேட்டி

மத்திய-மாநில அரசுகளை விமர்சனம் செய்வதற்கான நேரம் கடந்து விட்டது என்றும், ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்வோம் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்வோம்: மத்திய-மாநில அரசுகளை விமர்சனம் செய்வதற்கான நேரம் கடந்து விட்டது - கமல்ஹாசன் பேட்டி
Published on

சென்னை,

கொரோனா நோய் தாக்கத்தின் எதிரொலியாக பொதுமக்கள் அனைவரும் கடந்த ஒரு மாதமாக வீடுகளில் முடங்கி இருக்கும் நிலையில், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், அறிவும் அன்பும் என்ற தலைப்பில், அழிவின்றி வாழ்வது அறிவும் அன்பும் தான் என்ற பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலை இணையதளம் வழியாக பத்திரிகையாளர்கள் மத்தியில் நேற்று வெளியிட்ட கமல்ஹாசன் பேசும்போது, இணையதளம் வழியாக உங்கள் மத்தியில் பேசுவது இதுவே முதல்முறை. இதுவே, ஆரோக்கியமானதாக, ஆடம்பரம் இல்லாமல் இருக்கிறது. அதில் எனக்கு சந்தோஷம். இப்போது நான் அறிவும் அன்பும் என்ற தலைப்பில் பாடிய பாடலை வெளியிட்டுள்ளேன். அந்தப் பாடலை நீங்கள் கேட்கும்போது அதற்கான பெயர் காரணம் புரியும் என்றார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கமல்ஹாசன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- உலகம் முழுவதிலும் இப்போது கொரோனாவுக்கு எதிரான போர் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு இப்போது என்ன உதவி தேவையாக இருக்கிறது?.

பதில்:- மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகத்தை மருத்துவமனைக்காக கொடுக்க தயாராக உள்ளோம். எங்கள் கட்சியிலேயே பல பேர் டாக்டர்களாக உள்ளனர். ஆனால், அரசிடம் நாங்கள் தெரிவித்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. முடிந்த அளவிலான உதவிகளை ஆங்காங்கே மக்களுக்கு செய்கிறோம். அதற்கு மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பு தருகிறது.

கேள்வி:- தற்போது மே 3-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் ஊரடங்கு உத்தரவு தேவையாக இருக்குமா?.

பதில்:- இப்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு போதாது. இது மேகம் மாதிரி உடனே கலைந்து போகாது. இது டாக்டர்கள், விஞ்ஞானிகள் கூற்று. மனிதனே மனிதனுக்கு மருந்தாகும் காலம் வெகு விரைவில் வரும்.

கேள்வி:- கொரோனா நோய் தாக்கத்தால், சினிமா தியேட்டர்களையும் ஜூன் மாதம் வரை திறக்க முடியாத சூழல் இருப்பதாக சொல்லப்படுகிறதே?.

பதில்:- அத்தியாவசிய தேவையான போக்குவரத்து, காவல், மருத்துவம் போல் அல்ல சினிமா. 2-வது உலகப் போரின்போதே சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதாம். அப்போது தியேட்டர்கள் குறைவு. இப்போது, நஷ்டத்தில் பல வியாபாரங்கள் உள்ளது. அதில் சினிமாவும் ஒன்று.

கேள்வி:- கொரோனா நோய்க்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் பணி திருப்தி அளிக்கிறதா?.

பதில்:- இப்போது இதுபற்றி விமர்சனம் செய்வதற்கான நேரம் கடந்து விட்டது. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதற்கான நேரம் இது. இவை முடிந்த பிறகு விமர்சனம் செய்வோம். மருத்துவர்களையும், காவலர்களையும் அவமரியாதை செய்தால், அது மனித சரித்திரத்தில் கலங்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால், ஒரு தலைமுறை நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது.

கேள்வி:- கொரோனா நோய்க்கு என்ன தான் தீர்வு?.

பதில்:- யாரும் பதற்றம் அடைய வேண்டாம். நம் தலைமுறையில் முதன் முறையாக இதுபோன்ற நோய் தொற்றை பார்க்கிறோம். எங்கள் குடும்பத்திலும் பாட்டி ஒருவர் 100 ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து விடுபட்டிருக்கிறார். இதுபோன்ற நோயில் இருந்து மனிதநேயம், சுகாதாரம் ஆகியவற்றை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணம் வேண்டாம். ஜப்பானில் ஹிரோசிமா நாகசாகி அழிக்கப்பட்டபோது, இனி ஜப்பான் எழுந்திருக்காது என்றார்கள். ஆனால், யாருடைய உதவி இல்லாமல் ஜப்பான் வளர்ச்சி அடைந்தது. இனி நமது வியாபார கலாசாரம் மாறப் போகிறது. அணிசாரா தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com