நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், "நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய பாஜக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நீட் முதுநிலை தேர்வு கட்-ஆப்-ஐ பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய 'தகுதி' மற்றும் நுழைவுத் தேர்வில் 'தகுதி' என்பது அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது. தகுதி தேவையில்லை.

நீட் = பூஜ்ஜியம். நீட் தேர்வுக்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் நீட் தேர்வில் இல்லை.

விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வு என்ற பலிபீடம் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com