வருமான வரித்துறைக்கு மின்னணு முறையில் படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் மத்திய நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை

வருமான வரித்துறையில் பல்வேறு படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
வருமான வரித்துறைக்கு மின்னணு முறையில் படிவங்கள் தாக்கல் செய்ய கால அவகாசம் மத்திய நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை
Published on

சென்னை,

வரி செலுத்துவோர் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு வருமான வரிச்சட்டம், 1961-ன் படி சில படிவங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டித்து மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி பதிவு அல்லது அறிவிப்பு அல்லது ஒப்புதலுக்கான விண்ணப்ப படிவம் தாக்கல் செய்ய ஆகஸ்டு 31-ந்தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது. அவற்றை இனி 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்கு முன் தாக்கல் செய்யலாம்.

கால அவகாசம் நீட்டிப்பு

அதேபோல் சமன்படுத்தல் வரி அறிக்கை, அங்கீகரிக்கப்பட்டவர்களால் வழங்கப்பட வேண்டிய காலாண்டு அறிக்கை படிவம் எண் 15சிசி, பெறுநர்களிடமிருந்து பெறப்பட்ட அறிவிப்புகளை பதிவேற்றம் செய்யும் படிவம், முதலீடுகள் தொடர்பாக இறையாண்மை செல்வ நிதியத்தால் செய்யப்பட வேண்டிய தகவல்கள், ஒவ்வொரு முதலீட்டைப் பொறுத்தமட்டில் ஓய்வூதிய நிதியத்தால் செய்யப்பட வேண்டிய தகவல் ஆகியவற்றில் ஒரு சிலவற்றை வருகிற நவம்பர் 30-ந்தேதிக்கு முன்பாகவும், ஒரு சிலவற்றை டிசம்பர் 31-ந்தேதியும் தாக்கல் செய்யும் வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.incometaxindia.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இதேபோல் விவாத் சே விஷ்வாஸ் சட்ட பிரிவு-3ன் கீழ் செலுத்தப்பட வேண்டிய கட்டணத்திற்கான கடைசி தேதியும் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை கமிஷனர் சுரபி அலுவாலியா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com