ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமான நிலையம், கிங்ஸ் ஆஸ்பத்திரியில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு

ஒமைக்ரான் வைரசை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சென்னை விமான நிலையம் மற்றும் கிங்ஸ் ஆஸ்பத்திரியில் நேற்று மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விமான நிலையம், கிங்ஸ் ஆஸ்பத்திரியில் மத்திய நிபுணர் குழுவினர் ஆய்வு
Published on

சென்னை,

இந்தியாவில் கடந்த 2-ந் தேதி காலடி எடுத்து வைத்த ஒமைக்ரான் வைரஸ், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவின் 19 மாநிலங்களில் 578 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 42 பேரின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அந்த வகையில் தமிழகத்துக்கு டாக்டர் வினிதா தலைமையிலான டாக்டர்கள் பர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தனர்.

ஆலோசனை கூட்டம்

தொடர்ந்து நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு நிலை குறித்தும், எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடைக்கைகள் குறித்தும் மத்திய குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கட்ட தடுப்பு பணிகள் குறித்தும் மத்திய குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து விவரங்களை மத்திய அரசின் மரபணு ஆய்வகங்கள் பரிசோதனை செய்து அறிவிக்கிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறி 97 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 10 நாட்களுக்கு பின் தொற்று இருப்பதாக புனே, ஐதராபாத், பெங்களூரு மரபணு ஆய்வகங்களில் இருந்து தகவல் வருகிறது. ஆனால், அதற்குள் பலர் குணமடைந்து செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள மரபணு ஆய்வகத்தின் மூலம் பரிசோதனை செய்து முடிவுகளை அறிவித்தால் எவ்வளவு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறது என்பது விரைவாக தெரியவரும்.

சமூக பரவல்

சென்னையில் உள்ள மரபணு ஆய்வகத்தில் ஒமைக்ரான் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதன்மூலம் உடனுக்குடன் ஒமைக்ரான் பாதிப்பை கண்டறிய முடியும்.

தற்போது பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். கடிதம் எழுதி ஒருவாரம் கடந்துவிட்ட நிலையில் இன்னும் பதில் வரவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால் தொற்று பரவலை வெகுவாக குறைக்க முடியும். இவை அனைத்தையும் மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என மத்திய நிபுணர் குழுவினரிடம் தெரிவித்துள்ளோம். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருந்த நிலை மாறி சமூக தொற்றாகவும் மாறி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான நிலையத்தில் ஆய்வு

இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து மத்திய நிபுணர் குழுவினர் நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டு பயணிகளுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனை, ஒமைக்ரான் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் வழங்க நிறுவப்பட்டுள்ள வார்டுகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மத்திய நிபுணர் குழுவினர் டாக்டர்களிடம் கேட்டறிந்தனர். இந்த குழுவினர் தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com