

திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர் திருவாரூர் பக்தவத்சலம், தந்தை பெருமாள் பிள்ளை மற்றும் தாயார் ஆனந்தவல்லி ஆகியோரின் மகனாக 1957-இல் பிறந்தார். தனது குழந்தை பருவத்திலேயே தந்தையை இழந்த இவர், ஐந்து வயதில் தனது தாயாரிடம் பாட்டு கற்க தொடங்கினார்.
பக்தவத்சலம் தனது தாய்மாமா கிருஷ்ணமூர்த்தியிடம் மிருதங்க கலையை கற்றுக்கொண்டார். தனது 9 வயதில் தாயாருக்கு பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசிக்க தொடங்கினார். ஆண்கள் மேல்நிலை பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பித்தார். ஆனால், அவருக்கு மிருதங்கத்தின் மீது இருந்த ஆர்வத்தால் கல்லூரிக்கு செல்லாமல், தனது இசை வாழ்க்கையை தொடர்ந்தார்.
தஞ்சாவூர் பாணியில் மிருதங்கம் வாசிப்பதில் உலக புகழ்பெற்ற இவர், ஏராளமான சர்வதேச இசை விழாக்களில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டித் தொடக்க நாள் விழாவில் மிருதங்கம் வாசித்துள்ளார்.
மிருதங்க கலையில் தனித்துவமான பங்களிப்பை வழங்கி, நமது பாரம்பரிய இசையை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்துள்ள இவரது வாழ்நாள் சேவையை போற்றும் வகையில் இந்த ஆண்டின் பத்மஸ்ரீ விருது மத்திய அரசு அறிவித்துள்ளது.