

சென்னை,
பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பயன் பெறுவார்கள். மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு வழங்கப்படுகிறது.
இதில் பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் முதல் கட்டம் முடிவடைந்தநிலையில், 2024ம் ஆண்டு பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் நாடு முழுவதும் 5 ஆயிரத்து 206 நகரங்களில், 71.55 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு அறிவித்துள்ள பிரதமரின் வீட்டுவசதி திட்ட இரண்டாம் கட்டத்தில், தமிழகத்தில் 722 நகரங்களில், 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 300 சதுரடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான மொத்த செலவில் 2.50 லட்சம் ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்கும் மீதித் தொகையை தமிழக அரசு வழங்கும். திட்டத்தின் இரண்டாம் பாகத்தில், வழக்கமான முறைக்கு பதிலாக, புதிய தொழில்நுட்பத்தில் வீடுகள் கட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.