

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவ சாதனங்கள் பூங்கா
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொழில் பூங்காக்களும், குறிப்பிட்ட தொழில்களுக்கான சிறப்பு பூங்காக்களும் சிப்காட் நிறுவனத்தின் மூலம் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில், 2021-2022-ம் ஆண்டின் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்தில் சிப்காட் நிறுவனம் மூலம் ஒரு மருத்துவ சாதனங்கள் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நிதியுதவி வேண்டி மத்திய அரசின் மருந்தியல் துறைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு கருத்துருவை அனுப்பி வலியுறுத்தியிருந்தேன்.
மத்திய அரசு ரூ.100 கோடி நிதியுதவி
தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, தற்போது இந்திய அளவில் 4 மருத்துவ சாதனங்கள் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்துள்ளது. இமாச்சலபிரதேசம், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் வரிசையில், தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடத்திலும் இந்த மருத்துவ சாதனங்கள் பூங்கா அமையும். இத்திட்டத்தின் மூலம், ஒரகடம் மருத்துவ சாதனங்கள் பூங்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த அதிகபட்சமாக ரூ.100 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கும்.
இந்த மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் பூங்காவானது ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 350 ஏக்கர் நிலப்பரப்பில், சுமார் ரூ.450 கோடி திட்ட மதிப்பீட்டில் அடிப்படைக் கட்டமைப்புடன் சிறப்புக் கட்டமைப்புகளான ஆய்வுக்கூடங்கள், முன்னோடி மாதிரி மையம், அளவுத்திருத்த வசதி, திறன் மேம்பாட்டு மையம் முதலியவற்றை உள்ளடக்கி ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலை வழங்குகிற ஒரு குடையின்கீழ் அமைந்த பல்வேறு வசதிகளைக் கொண்ட பூங்காவாக திகழும்.
10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த பூங்காவானது மருத்துவத் துறையின் தேவைகளை நிறைவேற்றும்விதமாக மருத்துவ சாதனங்களான வென்டிலேட்டர்கள், பி.பி. திரைகள், பேஸ்மேக்கர்கள், அறுவை சிகிச்சை உபகரணங்கள் கண் மற்றும் பல் உள்வைப்புகள் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழில்களை ஊக்குவிக்கும்விதமாக அமையும்.
இம்மருத்துவ சாதனங்கள் பூங்கா சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீட்டை ஈர்ப்பதுடன், 10 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். மருத்துவ சாதனங்கள் உற்பத்திக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்படும் இப்பூங்கா, சர்வதேச தர அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும். மருத்துவ வசதிகளுக்கு ஒரு புகழ்பெற்ற மையமாக திகழும் தமிழ்நாடு, இந்த பூங்காவின் மூலம் மருத்துவ சாதனங்கள் உற்பத்தியிலும் உலகளவில் ஒரு முக்கியமான உற்பத்தி மையமாக உருவாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.