நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள சலுகைகள் பஞ்சப்படி கேட்டால் பஞ்சுமிட்டாய் கொடுப்பதாக உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
Published on

சென்னை,

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச்செயலாளர் வி.துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் சமீபத்திய அறிவிப்புகள் லட்சக்கணக்கான ஊழியர்களை கோபத்திலும், ஏமாற்றத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த அறிவிப்புகளை மத்திய அரசு ஊழியர்கள் ஏற்கனவே அவர் அறிவித்த வெற்று அறிவிப்பான சாமானிய மக்களுக்கு பயன்தராத ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதியாகத்தான் பார்க்கிறார்கள்.

மத்திய அரசு ஊழியர்களின் ரூ.37 ஆயிரத்து 530 கோடி அகவிலைப்படியை பறித்துக்கொண்டதினால் சேமித்த தொகையை திரும்ப வழங்கி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை விட்டுவிட்டு, மாதந்தோறும் ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.1,260 முதல் ரூ.4 ஆயிரம் வரையும், ஓய்வூதியதாரர்கள் ரூ.630 முதல் ரூ.3 ஆயிரத்து 500 வரை இழந்துகொண்டிருக்கும் நிலையில், வழக்கமாக அறிவிக்கப்படும் பண்டிகை கால போனஸ் தொகையையும் இன்னும் வழங்காமலும், அடிப்படை ஊதியத்தை பண்டிகைக்கால முன்பணமாக வழங்கக்கோரும் எங்களது நீண்டகால கோரிக்கையையும் மறுத்துவிட்டு, வெறும் ரூ.4 ஆயிரம் கோடி கடன் அறிவிப்பை வெளியிட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. பஞ்சபடி கேட்ட அரசு ஊழியர்களுக்கு பஞ்சு மிட்டாய் வழங்குகிறார்.

எப்படி மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய அவர்களுடைய ஜி.எஸ்.டி. பங்குதொகையை தராமல் கடன் வாங்கிக்கொள்ள சொன்னார்களோ, அதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கான நிர்மலா சீதாராமனின் இத்தகைய கடன் அறிவிப்புகள், வெகுவிரைவில் மாத ஊதியத்திற்கு பதிலாக கடன் வழங்க உள்ளோம் என்ற வருங்கால அறிவிப்பிற்கு முன்னோடியாக உள்ளதோ என எண்ண தோன்றுகிறது. மேலும், அரசு ஊழியர்களின் இன்றைய நிலைமை தெரியாமல் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 15 செலவழித்து ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 15 ரூபாய் சேமிக்க சொல்லும் நிர்மலா சீதாராமனின் பயணகால சலுகை அறிவிப்பானது, நாட்டின் பொருளாதார சூழ்நிலையும் இந்திய மக்களின் இன்றைய வாழ்க்கை தரமும் தெரியாமல் கார்ப்பரேட்டுகளுக்கான உலகத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எள்ளளவும் உதவாத நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புகளை மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com