

சென்னை,
சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் சேவை தரத்தை சர்வதேச அளவிற்கு உயர்த்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. இதன்படி, இந்த இரு முக்கிய விமான நிலையங்களையும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு முறையின்கீழ் கொண்டுவர மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
டெல்லி, மும்பை, பெங்களூரு, ஜதராபாத் ஆகிய முன்னணி நகரங்களின் விமான நிலையங்கள் ஏற்கனவே தனியாரால் வெற்றிகரமாக நிர்வகிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களையும் அந்த பட்டியலில் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, முன்னணி தனியார் நிறுவனங்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் விமான நிலையங்களை ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் சேவைத் தரம், பயணிகள் வசதி, விமானப் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளும் திறன் ஆகியவை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை தனியார் மயமாக்கவேண்டும் என்றும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இதன் சேவைகளை உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
விமான நிலையங்களின் அன்றாட நிர்வாகம், கடைகள், உணவகங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மட்டுமே தனியார் வசம் செல்லும். அதே நேரத்தில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் மிக முக்கிய சேவையான விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தின் மூலம் சென்னை விமான நிலையம் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் புதுப்பொலிவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.