சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை


சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை
x
தினத்தந்தி 30 May 2025 10:10 AM IST (Updated: 30 May 2025 11:47 AM IST)
t-max-icont-min-icon

சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது

புதுடெல்லி,

இந்தியாவில் வங்கிகளுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி ரிசர்வ் வங்கியில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் தருண் சிங் அனுப்பிய அந்தச் சுற்றறிக்கையில் தங்க நகைக்கடனில் முறைகேடு நடப்பதாகவும் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவதில் ஒழுங்கற்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது மேலும் நகைக்கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில் நகை வாங்கிய ரசீதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட புதிய விதிகள் கொண்டு வரப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளில் நகைகளை அடகு வைப்பவர்கள், ஆண்டுதோறும் வட்டியை மட்டுமே செலுத்தி, மறு அடகு வைக்கலாம் என்றிருந்த நிலையை மாற்றி, அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டு நெறிமுறையைக் கொண்டு வந்தது. இந்த புதிய விதிமுறைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவசர தேவைகளுக்காக வங்கியில் நகைகளை வைத்து கடன் பெறுபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என கவலை தெரிவித்தனர்.

இந்த நிலையில், சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. அதாவது, ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்; புதிய விதிமுறைகளை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் செயல்படுத்தலாம் எனத்தெரிவித்துள்ளது. நகைக்கடன் நிறுவனங்கள், பொதுமக்களிடம் இருந்து பெற்ற கருத்துக்களின் அடிப்படையில் விதிகளை தளர்த்த மத்திய நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிகிறது.

1 More update

Next Story