மத்திய அரசு 9 பேர் குழுவை அமைப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் சரத்குமார் பேட்டி

காவிரி நதிநீர் பங்கீட்டுக் காக மத்திய அரசு 9 பேர் குழுவை அமைப்பது, வெறும் கண்துடைப்பு நாடகம் என்று சரத்குமார் கூறினார்.
மத்திய அரசு 9 பேர் குழுவை அமைப்பது வெறும் கண்துடைப்பு நாடகம் சரத்குமார் பேட்டி
Published on

திருச்சி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் அவசியத்தை விளக்கும் வகையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மேட்டூர் அணையில் இருந்து மயிலாடுதுறை வரை காவிரி உரிமை மீட்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி உள்ளார்.

இந்த பயணத்தின் தொடர்ச்சியாக நேற்று மாலை திருச்சி வந்த சரத்குமார், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே கரூர் பைபாஸ் சாலையில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

காவிரி நதிநீர் பங்கீட்டுக் காக 9 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைப்பதாக கூறி இருப்பது வெறும் கண்துடைப்பு நாடகம். கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலதாமதம் செய்து வருகிறார்கள். இந்த பிரச்சினைக்காக அனைத்து கட்சிகளும் ஒன்று கூடி பேசினோம்.

அதில், அனைத்துக்கட்சி தலைவர்களும் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் பிரதமர் அதற்கு நேரம் ஒதுக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் கொடுத்த காலக்கெடுவுக்குள் அமைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்பதை முன்கூட்டியே சொல்ல வேண்டும்.

காவிரி நதிநீர் பிரச்சினை டெல்டா பகுதிகளுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினை. இந்த விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்குதேசம் கட்சி பாராளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும். காவிரி பிரச்சினையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வார்களா? என்று பா.ஜ.க.வின் மாநில பொறுப்புகளில் உள்ளவர்கள் கேட்கிறார்கள். அவர்கள் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்.

பா.ஜ.க.வின் மாநில பொறுப்பில் உள்ளவர்கள் மத்தியில் ஆட்சி செய்யும் அவர்களுடைய கட்சி தலைமைக்கு அழுத்தம் தர முடியுமா?. ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்தபோது, முதன்முதலில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியவன் நான் தான். அந்த விதை தான் மிகப்பெரிய மாணவர்கள் போராட்டமாக மாறியது. தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகிறேன். தற்போது அ.தி.மு.க. வுடன் உறுதுணையாக தான் இருந்து வருகிறோம். அதே நேரத்தில் ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டியும் வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை, காந்திமார்க்கெட் மரக்கடை பகுதிகளில் சரத்குமார் வேனில் நின்றபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், அதற்கு அனைவரும் ஒன்று திரண்டு குரல் எழுப்ப வேண்டும் என்பதையும் மக்களிடம் விளக்கி பேசினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com