பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் - பிரகாஷ்கரத் வலியுறுத்தல்

பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் வலியுறுத்தியுள்ளார்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் - பிரகாஷ்கரத் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரகாஷ் கரத்தை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் நிருபர்களிடம் பிரகாஷ்கரத் கூறியதாவது:-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இடம் பெற்றுள்ளது. தி.மு.க. தலைமையிலான அணி வலுவாகவும், உறுதியாகவும் உள்ளதால் நடக்க உள்ள சட்டப்பேரவைத தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியை நிச்சயம் தோற்கடிக்கும்.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டு உள்ளதால் தமிழக மக்கள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி உள்ளனர்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 63 சதவீதம் மத்திய அரசின் கலால் மற்றும் இதர வரிகளை கொண்டதாகும். பெட்ரோலிய பொருட்கள் மீதான மத்திய கலால் வரி மற்றும் இதர வரிகளை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இந்த வரிகளை குறைத்தாலே பெட்ரோல், டீசல் விலை உடனடியாக பாதியாக குறைந்து விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com