மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டம்: பின்னலாடை தயாரிப்பு 25 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு

ஜவுளித்துறைக்கு புதிய திட்டங்கள், மானியங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
திருப்பூர்,
இந்தியாவில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்துறை உள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு புதிய திட்டங்கள், மானியங்களை ஜவுளித்துறைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்களால் திருப்பூர், கோவை போன்ற ஜவுளித்தொழில் அதிகம் உள்ள நகரங்கள் நேரடியாக பயன்பெற இருக்கிறது. அதன்படி டெக்ஸ்-ராம்ப்ஸ் என்ற திட்டம் ஆராய்ச்சி, புதுமை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்கு முக்கியமாக உள்ளது.
உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் (பி.எல்.ஐ.) திட்டம் மூலமாக செயற்கை நூலிழை ஆடைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளித்துறை வளர்ச்சிக்கு உதவும். உற்பத்தியை அதிகரிக்கவும், உயர் மதிப்புள்ள துணிகளை உருவாக்கவும் நேரடி பண உதவி வழங்குவதற்கான பெரிய முயற்சியாக உள்ளது. இதன் மூலமாக பருத்தி ஆடைகளை அதிகம் தயாரித்து வரும் திருப்பூர், செயற்கை நூலிழை ஆடைகளையும் அதிகம் உற்பத்தி செய்து உலக சந்தையில் பங்களிப்பை வழங்க முடியும்.
பிஎம்-மித்ரா திட்டம் உலகத்தரமான ஒருங்கிணைந்த டெக்ஸ்டைல் நகரங்களை உருவாக்குவதாகும். ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளது. பூஜ்ய கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள், சரக்குகளை கையாளும் வசதிகள், தொழிலாளர்கள் குடியிருப்புகள், பயிற்சி மையங்கள் ஆகியவை இடம்பெறுகிறது.
இதன்மூலமாக ஒரே இடத்தில் பஞ்சில் இருந்து நூல் தயாரித்து அதில் இருந்து துணிகளை உருவாக்கி, பின்னர் ஆடைகளாக உருவாக்க முடியும். கோவை, திருப்பூர் பகுதியில் இந்த பூங்காக்கள் அதிக பயனை வழங்க இருக்கிறது. ஏ-டப்ஸ் திட்டம் என்ற தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டம் மூலமாக தொழிற்சாலைகளுக்கு எந்திரங்கள் வாங்கும்போது ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
முன்பு டப் திட்டமாக இருந்தது. இப்போது மேம்படுத்தப்பட்டு ஏ-டப்ஸ் திட்டமாக செயல்படுகிறது. இதன் மூலமாக பனியன் நிறுவனங்களுக்கு தேவையான நவீன எந்திரங்கள், டிஜிட்டல் பிரிண்டிங் எந்திரங்கள், தானியங்கி எந்திரங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து தொழிலை விரிவுபடுத்த முடியும். சமர்த் திட்டத்தில் திறமையான தொழிலாளர்களை உருவாக்க வழி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலமாக பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தி 15 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் மூலமாக திருப்பூரில் சுத்திகரிப்பு நிலையங்கள் நவீன முறையில் அமைக்கப்படுவதால் வெளிநாட்டு ஆர்டர்கள் வருகை அதிகரிக்கும் என பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






