காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - சசிகலா

உணவு உற்பத்திக் களமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் - சசிகலா
Published on

சென்னை,

சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு டெண்டர் கோரியிருப்பதாக வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. திமுக தலைமையிலான அரசும் ஏதோ முதற்கட்ட ஆய்வுக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறுவது விவசாயிகளுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது தமிழக டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கின்ற மிகப்பெரிய துரோகமாகும்.

இதேபோன்று கடந்த 2010ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி இருந்தபோது தான், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மீத்தேன் வாயு எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் அன்றைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

இதற்கு அப்போது மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவும் உடந்தையாக இருந்தது. அதனைத்தொடர்ந்து 2011-இல், முந்தைய திமுக அரசு நான்கு ஆண்டுகளுக்கு டெல்டா பகுதியில் பெட்ரோலிய ஆய்வு மேற்கொள்ளும் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு வழங்கியது. ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு 2013 ஆம் ஆண்டு கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம், மீத்தேன் திட்டம் தொடர்பாக ஆய்வு கிணறு தோண்டுவதற்கு கூட அனுமதி அளிக்காமல், அத்திட்டத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது.

மத்திய அரசும் இதனை ஏற்றுக் கொண்டு மீத்தேன் திட்டத்தை கைவிட்டது. ஆனால், இன்றோ மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொல்லி காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்க முடிவு எடுத்து இருப்பது முற்றிலும் தவறான நடவடிக்கை. இதன் காரணமாக சுமார் 20 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளது. விவசாய தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்துகொண்டு இருக்கும் விவசாயப்பெருங்குடி மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.

திமுக தலைமையிலான அரசு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த உறுதியான நடவடிக்கைளை மேற்கொண்டு காவிரி டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்.

மேலும், மத்திய அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும். உணவு உற்பத்திக் களமாக விளங்கும் காவிரி டெல்டா பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய நிலக்கரி எடுக்கும் முடிவை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com