

சென்னை,
கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மத்திய நிதித்துறை (செலவீனங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் (ஐதராபாத்) இயக்குனர் (பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத்சவா,
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் நேற்றிரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினர். அந்த ஓட்டலில் குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் இரவில் ஆலோசனை நடைபெற்றது. அதில் அவர்களின் பயணத்திட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டது.
கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினருடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆலோசனை நடத்தினார். பின்னர் வருவாய் பேரிடர் ஆணையர் ராஜேந்திர ரத்னுவுடன் மத்தியக்குழு ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்கு பின் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை மத்தியக்குழு சந்தித்து ஆலோசனை நடத்தியது பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டம் முடிந்ததும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்கள். அங்கு செல்லும் மத்திய அதிகாரிகள், குழு குழுவாக பிரிந்து கார் மூலம் புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவார்கள்.
மத்திய குழுவின் பயண விவரம் வெளியாகி உள்ளது.
* இன்று மாலை 4.30 மணிக்கு புதுக்கோட்டையில் முதல் கட்ட ஆய்வை தொடங்குகின்றனர். புதுக்கோட்டை : அருந்ததியர் காலனி, சோழகன்பட்டி, கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உறியான்பட்டி, நெப்புகை, வீராடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களில் மத்தியக்குழு ஆய்வு செய்கிறது
* இரவு 8.30 மணிக்கு தஞ்சையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
* நாளை காலை 7 மணி முதல் 1 மணிவரை மீண்டும் தஞ்சையில் ஆய்வை மேற்கொள்கின்றனர்.
* நாளை மாலை 3.30 மணிக்கு திருவாரூரில் ஆய்வை மேற்கொள்கிறார்கள்.
* திங்கட்கிழமை காலை 7 மணி முதல் நாகை மற்றும் வேதாரண்யத்தில் ஆய்வை மேற்கொள்கிறது மத்திய குழு.
* தொடர்ந்து மாலை 2.30 மணிக்கு காரைக்கால் - புதுச்சேரி பகுதியில் மத்திய குழு ஆய்வை மேற்கொள்கிறது.
3 நாட்கள் ஆய்வு செய்யும் மத்திய குழுவினர் வருகிற 27ஆம் தேதி மீண்டும் சென்னை வந்து, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார்கள்.