

திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் இன்று (சனிக்கிழமை) தீபம் ஏற்ற சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், மத்திய படையினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டனர்.
அதாவது, மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் 105-வது படைபிரிவான (ரேபிட் ஆக்சன் போர்ஸ்) பட்டாலியன் வீரர்கள் 130 பேர் கமாண்டன்ட் சுனில்குமார் தலைமையில் கோவையில் இருந்து நேற்று இரவு 10.15 மணியளவில் வந்து சேர்ந்தனர். தனக்கன்குளம் சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு வந்தனர். சுமார் 3 பஸ்களில் வந்த அவர்கள், இரவு அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கினர். நள்ளிரவில் கோவையில் இருந்து மேலும் 40 பேர் திருப்பரங்குன்றம் வந்தனர்.
இன்று தீபம் ஏற்றும்போது சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக திருப்பரங்குன்றம் கோவில், மலைப்பகுதி. தீபத் தூண் மற்றும் சிக்கந்தர் தர்கா பகுதிகளில் முகாமிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
3 ஆண் அதிகாரிகள், ஒரு பெண் அதிகாரி ஆகியோர் இந்த குழுவை வழிநடத்த உள்ளதாகவும், மேலும் கூடுதலாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.