செங்கல்பட்டு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

மதுராந்தகம், மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
செங்கல்பட்டு,
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை உலர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெல் கொள்முதல் பணிகள் தாமதமடைந்துள்ளன. மத்திய அரசு விதிகளின்படி நெல்மணிகளின் ஈரப்பதம் 17 சதவீதத்தை மீறக்கூடாது என்ற நிபந்தனையுடன் தற்போது கொள்முதல் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டுகளில் மழைக்காலங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியது. அந்த வகையில், தற்போது பெய்து வரும் மழையை கருத்தில் கொண்டு 22 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்திய உணவுத்துறை துணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்கள் மற்றும் உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழு ஆகியோர் அடங்கிய மத்திய அதிகாரிகள் குழுவினர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 6 இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மதுராந்தகம், மாமல்லபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் இந்த ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.






