மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு தணிக்கை நடத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு தணிக்கை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு தணிக்கை நடத்த வேண்டும் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை,

இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களான டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம், அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கடந்த ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி ஒரே ஒரு பேராசிரியர் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து நியமிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பார்த்தால் மத்திய பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு பதிலாக, ஒரு சதவீதத்துக்கும் குறைவாக, 0.77 சதவீதம் மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இணைப்பேராசிரியர் பணியை பொறுத்தவரை 735 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 38 ஓ.பி.சி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது இணை பேராசிரியர் பணிகளில் ஓ.பி.சி.க்கு 1.39 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. உதவிப்பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் ஓ.பி.சி.களுக்கு சுமார் 16 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டு விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

எனவே மத்திய அரசின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டு தணிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். ஓ.பி.சி.களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு யார் கைப்பற்றியுள்ளனர்? அது எவ்வாறு சாத்தியமானது? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் ஆட்களை நியமிக்கும் அதிகாரத்தை அந்த நிறுவனங்களின் தலைவர்களிடமிருந்து பறிக்கவேண்டும். அந்த பணியை மேற்கொள்ள வெளிப்படைத்தன்மை கொண்ட தேர்வாணையம் அமைக்கப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com