முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஆய்வு

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முல்லைப்பெரியாறு அணை கொண்டு வரப்பட்டது
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழ்கிறது. இந்த அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிட்டு உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கடந்த 2014-ம் ஆண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப்பொறியாளர் தலைமையிலான இந்த குழுவில் தமிழக, கேரள மாநில பிரதிநிதிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த கண்காணிப்பு குழுவுக்கு உதவிகரமாக இருப்பதற்காக, துணை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டது. கண்காணிப்பு குழுவினர் மற்றும் துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு செய்து, அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
கடந்த ஆண்டு முதல், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் முல்லைப்பெரியாறு அணை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து உரிய ஆலோசனைகள் வழங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, 7 பேர் கொண்ட புதிய மேற்பார்வைக்குழு அமைக்கப்பட்டது. இந்த புதிய மேற்பார்வைக்குழுவினர் கடந்த மாதம் 22-ந்தேதி அணையில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்ஹா நேற்று திடீர் ஆய்வு செய்தார். இதற்காக அவர், தேக்கடிக்கு நேற்று காலை வந்தார். பின்னர் அங்கிருந்து படகு மூலம் அணைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை என்ஜினீயர் சதீஷ்குமார் மற்றும் தமிழக, கேரள நீர்வளத்துறை அதிகாரிகள் சென்றனர். அணையின் பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, மதகு பகுதிகள் ஆகியவற்றை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் பிற்பகலில் தேக்கடிக்கு திரும்பினர்.
இந்த ஆய்வு குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக முகேஷ் குமார் சின்ஹா பொறுப்பேற்றதை தொடர்ந்து முக்கிய அணைகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறார். கேரள மாநிலத்தில் இடுக்கி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகளை பார்வையிட வந்துள்ளார். அதன்படி முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்டு சென்றார். இது வழக்கமான ஆய்வு தான்' என்றனர்.






