தேசிய மாணவர் படையினர் 445 பேருக்கு சான்றிதழ் தேர்வு

குமரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படையினர் 445 பேர் ‘பி' சான்றிதழுக்கான தேர்வு எழுதினர்.
தேசிய மாணவர் படையினர் 445 பேருக்கு சான்றிதழ் தேர்வு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் தேசிய மாணவர் படையினர் 445 பேர் 'பி' சான்றிதழுக்கான தேர்வு எழுதினர்.

தேசிய மாணவர் படை

தேசிய மாணவர் படையினருக்கு ஒவ்வொரு ஆண்டும் 'ஏ', 'பி', மற்றும் 'சி' சான்றிதழ் தேர்வு நடத்தப்படும். இதில் 'ஏ' சான்றிதழ் தேர்வு பள்ளி மாணவர்களுக்கும், 'பி' மற்றும் 'சி' சான்றிதழ் தேர்வு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான 'பி' சான்றிதழ் தேர்வு நாகர்கோவிலில் உள்ள இந்து கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 26 கல்லூரிகளில் இருந்து 103 மாணவிகள் உள்பட மொத்தம் 445 தேசிய மாணவர் படையினர் பங்கேற்றனர். இந்த தேர்வு மொத்தம் 500 மதிப்பெண்களை கொண்டது.

துப்பாக்கி சுடுதல்

இதில் 145 மதிப்பெண்களுக்கு செய்முறை தேர்வு, 355 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும். அதன்படி நேற்று தேசிய மாணவர் படையினருக்கு செய்முறை தேர்வு நடைபெற்றது. இதற்கு மதுரை குரூப் கமாண்டர் கர்னல் அஜித் துபே தலைமை தாங்கினார். இதில் துப்பாக்கியை கையாளுதல், துப்பாக்கி பாகங்களை கழற்றி மாட்டுதல், குறிபார்த்து சுடுதல், வரைபடம் மூலம் இடத்தை கண்டறிதல், அணிவகுப்பு ஆகிய பிரிவுகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இன்று எழுத்துத்தேர்வு

இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து தேசிய மாணவர் படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

'பி' சான்றிதழ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் 'சி' சான்றிதழ் தேர்வு எழுதலாம். 'சி' சான்றிதழ் இருந்தால் ராணுவம், சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட துணை ராணுவத்தில் சேர முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com