அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தின் அடுத்த 24 மணிநேரத்தில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், உள் தமிழகத்தில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக, இன்று சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பிற்பகலில் ஓரளவு மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டி மீட்டரில்):

குடவாசல் (திருவாரூர்) 12, பாலவிடுதி (கரூர்), சேலம் , அணைமடுவு அணை (சேலம்) தலா 10, பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), மணப்பாறை (திருச்சி), மங்களபுரம் (நாமக்கல்), மணல்மேடு (மயிலாடுதுறை), கள்ளந்திரி (மதுரை) தலா 9, பெரம்பலூர், கயத்தாறு (தூத்துக்குடி), வானமாதேவி (கடலூர்) தலா 8, பாடலூர் (பெரம்பலூர்), ஹரூர் (தருமபுரி), அரவக்குறிச்சி (கரூர்), முகையூர் (விழுப்புரம்), தலா 7, காங்கேயம் (திருப்பூர்), நாமக்கல், இளையாங்குடி (சிவகங்கை), ஆலங்காயம் (திருப்பத்தூர்) தலா 6.

தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com