நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை,

தென்மேற்கு பருவமழை தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் தற்போது பரவலாக பெய்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவகாற்று காரணமாக, இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல், நாளை (சனிக்கிழமை) நீலகிரி, கோவை, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com