தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை மையம் தகவல்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், திண்டுக்கல், தேனியில் நாளை (சனிக்கிழமை) மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) இயல்பைவிட 43 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இந்தநிலையில் தற்போது நவம்பர் மாதம் தொடங்கி இருக்கும் சூழலில், கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள் ஆகியவற்றில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மிக கனமழை

மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை (சனிக்கிழமை) தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், அதற்கு அடுத்தநாள் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'ராமநதி அணைப் பகுதி 9 செ.மீ., ராமநாதபுரம் 8 செ.மீ., மாஞ்சோலை 7 செ.மீ., வத்திராயிருப்பு, கோவை விமான நிலையம், செங்கோட்டை, மூலைக்கரைப்பட்டி, காயல்பட்டினம், கன்னடயன் அணைக்கட்டு, தொண்டாமுத்தூர், குருந்தன்கோடு, பெரியாறு அணை, கோவை தெற்கு பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது . கோழிப்போர்விளை, கடல்குடி, இரணியல், காக்காச்சி, திருப்பூர், திருவாரூர், ஆர்.எஸ்.மங்கலம், குலசேகரப்பட்டினம், சாத்தான்குளம், சிவகங்கை பயணியர் விடுதி, சாத்தூர், சாத்தான்குளம், ஆயிக்குடி, மானாமதுரை, அம்பாசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com