

சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மதுரை, கரூர், சேலம், நாமக்கல், நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை முதல் மே 2 ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மே 3 ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 நாட்களும் ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.