தமிழகம், புதுச்சேரியில் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 11-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

9-ந்தேதி (நாளை), 10-ந்தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11-ந்தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தமிழக கடலோர பகுதிகளில், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கேரளா-கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ. முதல்55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

10-ந்தேதி லட்சத்தீவு பகுதிகள், கேரளா-கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. 11-ந்தேதி கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்திலும், அவ்வப்போது 65 கி.மீ. வேகத்திலும் வீசலாம். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவலாஞ்சி, மேல் பவானியில் 11 செ.மீ. மழை

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அவலாஞ்சி, மேல் பவானியில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. பந்தலூர் தாலுகா அலுவலகம், ஹாரிசன் எஸ்டேட், செருமுள்ளி, சின்னக்கலாரில் தலா 9 செ.மீ., சோலையாறு, தேவாலா, கூடலூர் பஜாரில் தலா 6 செ.மீ., குந்தா பாலம், வால்பாறை, சின்கோனாவில் தலா 5 செ.மீ., மேல் கூடலூர், தேக்கடி, சாம்ராஜ் எஸ்டேட்டில் தலா 4 செ.மீ., பெரியார், எமரால்டு, க்ளென்மார்கனில் தலா 2 செ.மீ., நடுவட்டம், ஊட்டி, ஆரணி, பாபநாசம், பார்வூட்டில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com