

சென்னை,
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததைத்தொடர்ந்து தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு குறைந்தது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதேபோல, 9-ந் தேதி (நாளை) முதல் 11-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழியில் 5 செ.மீ. மழை
நேற்று பிற்பகல் 12 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை, சீர்காழியில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மதுக்கூர், சிதம்பரத்தில் தலா 4 செ.மீ., அதிராமப்பட்டினம், நெய்வாசல் தென்பாதி, அண்ணாமலை நகர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, காரைக்கால், வேளாங்கண்ணியில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
நீடாமங்கலம், நாகப்பட்டினம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, மஞ்சளாறு, திருவாரூர், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, கடலூரில் தலா 2 செ.மீ., திருப்பூண்டி, மரக்காணம், மகாபலிபுரம், மணல்மேடு, காட்டுமன்னார்கோவில், நன்னிலம், வலங்கைமான், பெருஞ்சாணி அணை, புதுச்சேரி, திருக்கழுக்குன்றம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பட்டுக்கோட்டை, வனமாதேவி, புத்தனார் அணையில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.