தேசிய அளவில் 3-வது அணி : சந்திரசேகர ராவ் நாளை சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை

சந்திரசேகர ராவ் நாளை சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேசிய அளவில் 3-வது அணி அமைக்கும் முயற்சி குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
தேசிய அளவில் 3-வது அணி : சந்திரசேகர ராவ் நாளை சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை
Published on

சென்னை,

தேசிய அளவில் பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக மாநில கட்சிகளை கொண்ட 3-வது அணியை அமைக்கும் முயற்சியில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக அவர் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் போனில் தொடர்புகொண்டு பேசினார்.

3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் மம்தாவுடன் இணைந்து செயல்பட்டுவரும் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை சென்னை வருகிறார். அப்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். தேசிய அளவில் 3-வது அணி அமைப்பது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்து இருவரும் விவாதிக்கிறார்கள்.

பின்னர் சந்திரசேகர ராவ் கோபாலபுரம் சென்று தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரிக்கிறார். சந்திரசேகர ராவை தொடர்ந்து, அடுத்த வாரம் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.

அதனால், தேசிய அளவில் 3-வது அணி அமையும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதில் தி.மு.க.வும் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3-வது அணியில் தி.மு.க. இடம்பெற்றால், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com