

சென்னை,
இந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த 15-ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கவுண்ட்டவுனும் நடந்து வந்தது. ஆனால் ராக்கெட்டில் ஏற்பட்ட திடீர் கோளாறால் கடைசி நிமிடத்தில் சந்திரயான்-2 விண்கலத்தை ஏவுவது நிறுத்தப்பட்டது.
தற்போது அந்த கோளாறை விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் சரி செய்து விட்டனர். இதையடுத்து வரும் 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்துடன், ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டதால் நாங்கள் சோர்ந்து விடவில்லை. மீண்டும் சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்காக, ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த எரிபொருள் கசிவு சரி செய்யப்பட்டு உள்ளது. வரும் 22-ந்தேதி பகல் 2.43 மணிக்கு அந்த விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்துவோம். இதற்கான கவுண்ட்டவுன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் 20 மணிநேரம் இருக்க வாய்ப்பு உள்ளது. இன்னும் இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தனர்.