

திருச்சி,
பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால், பாலக்காடு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. குருவாயூர், நாகர்கோவில்-கோவை ரெயில் மாற்றுப்பாதைகளில் இயக்கப்படுகிறது.
திருச்சி, சேலம் ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சில ரெயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம் வருமாறு:-
நாளை (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை (24-ந்தேதி தவிர திருச்சியில் காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (எண்:76820) திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் காரைக்கால் செல்லாது. அதுபோல் மறு மார்க்கத்தில் காரைக்காலில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய காரைக்கால் திருச்சி டெமு ரெயில் (எண்:76819) திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். அந்த நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படாது.
அதுபோல் சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட புகழூர்-கொடுமுடி இடையே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி எக்ஸ்பிரஸ் (எண்:16844) நாளை மறுநாள் (வியாழக்கிழமை), 21-ந்தேதி, 24-ந்தேதி, 26-ந்தேதி மற்றும் 28-ந்தேதி ஆகிய நாட்களில் கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் இந்த ரெயில் திருச்சிக்கு வராது. அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு புகழூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக புகழூரில் இருந்து இயக்கப்படும்.
அதுபோல் திருச்சி-பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்:16843) வருகிற 20-ந்தேதி. 22-ந்தேதி மற்றும் 29-ந்தேதி ஆகிய 3 நாட்கள் திருச்சியில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் அன்று தண்டவாள பராமரிப்பு பணிகள் முடிந்தபிறகு சிறப்பு ரெயிலாக கரூரில் இருந்து பாலக்காடு டவுன் செல்லும். மேலும் திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயில் (எண்:56809) வருகிற 20-ந்தேதி திருச்சியில் இருந்து கரூர் வரை மட்டுமே செல்லும். ஈரோடுக்கு செல்லாது. அதுபோல் நாளை, வரு கிற 24-ந்தேதி, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் திருச்சி-மயிலாடுதுறை மெழு ரெயில் ஆலக்குடியில் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.