தென் மாவட்ட ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

கோவையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரெயில் (வ.எண்.16322) 23-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட வாடிப்பட்டி, சமயநல்லூர் மற்றும் சோழவந்தான் ஆகிய பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்தபாதையில் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்;
* இதற்கிடையே, கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும் ரெயில் (வ.எண்.16322) இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 23-ந் தேதி வரை திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். அதற்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து மேற்கண்ட நாட்களில் ஒரு சிறப்பு ரெயில் மாலை 3.30 மணிக்கு நாகர்கோவில் புறப்பட்டு செல்லும்.
* அதேபோல, மயிலாடுதுறையில் இருந்து மதுரை வழியாக செங்கோட்டை செல்லும் ரெயில் (வ.எண்.16847) வருகிற 3-ந் தேதி, 6-ந் தேதி, 10-ந் தேதி, 13-ந் தேதி, 17-ந் தேதி மற்றும் 20-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக மாற்றுப்பாதையில் விருதுநகர் சென்றடையும். இந்த ரெயில் புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* கத்ரா-நெல்லை வாராந்திர ரெயில் (வ.எண்.16788) வருகிற 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் சென்றடையும்.
இதற்கிடையே, கோவை-நாகர்கோவில் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துடன் ரத்து செய்யப்பட்டு, அங்கிருந்து சில மணி நேரம் கழித்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயிலாக இயக்கப்படுகிறது. இதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகத்தின் இந்த கட்டணத்துக்கு பயணிகள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே, மதுரை-ராமேசுவரம் இடையே இது போல சிறப்பு ரெயிலாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டதற்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






