கவுன்சிலர் தேர்தல் முடிவு மாற்றி அறிவிப்பு... உண்மையான காரணம் என்ன? - தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் கேள்வி

கவுன்சிலர் தேர்தலில் முடிவை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்கள் குறித்து விளக்கமளிக்க தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கவுன்சிலர் தேர்தல் முடிவு மாற்றி அறிவிப்பு... உண்மையான காரணம் என்ன? - தேர்தல் அதிகாரிக்கு ஐகோர்ட் கேள்வி
Published on

சென்னை,

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22 ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மதுரை மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளைப் பெற்று சமமான நிலையில் இருந்தனர்.

இதையடுத்து குலுக்கல் முறையில் பழனிச்செல்வியின் பெயர் தேர்வு செய்யப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென அந்த முடிவை மாற்றி திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனையடுத்து தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வெளியான அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, டி.கல்லுபட்டி பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலராக மனுதாரர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததற்கான காரணம் குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரதன் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் அதிகாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பணி அழுத்தம் காரணமாக தவறுதலாக திமுக வேட்பாளர் வெற்றி என அறிவித்தாக அவர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மதுரை டி.கல்லுபட்டி பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததற்கான உண்மையான காரணங்கள் குறித்த விவரங்களை விளக்கி புதிதாக மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com