தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து ரெயில்களின் எண்களும் மாற்றம்

தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 296 ரெயில்களின் எண்கள் ஜூலை 1-ந்தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளது.
தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து ரெயில்களின் எண்களும் மாற்றம்
Published on

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து மெமு, டெமு, பயணிகள் சிறப்பு ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் எனவும், கொரோனா கட்டுப்பாட்டுக்கு முன்பு வசூலித்த பழைய கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களுக்கான எண்கள் வழக்கமான பயணிகள் ரெயில்களுக்கான எண்களாக மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் இருந்து அனைத்து கோட்ட பொதுமேலாளருக்கும் சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வண்டி எண்கள் மாற்றம்

கொரோனா பரவலுக்கு பின்பு அனைத்து பயணிகள் ரெயிலும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில்களாக மாற்றி இயக்கப்பட்டன. இந்த ரெயில்களின் எண்களும் பூஜ்ஜியத்தில் ஆரம்பிக்கும் வகையில் மாற்றப்பட்டன. இந்நிலையில், தெற்கு ரெயில்வேயில் இயங்கும் அனைத்து முன்பதிவில்லா ரெயில்களின் எண்களையும் மாற்றி மீண்டும் 5, 6, 7 என தொடங்கும் பழைய எண்களை அறிவிக்க ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் இயங்கும் 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்களின் எண்கள் ஜூலை 1-ந்தேதி முதல் பழைய எண்களைக் கொண்டு இயக்கப்பட உள்ளது.

அந்தவகையில், சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.06033) என்ற எண்ணுக்கு பதிலாக (66033) என்ற எண்ணிலும், சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் (06025) என்ற எண்ணுக்கு பதிலாக (66051) என்ற எண்ணிலும் இயக்கப்பட உள்ளது. இதேபோல 288 பயணிகள் ரெயில்கள் மற்றும் 8 மலைப்பாதை ரெயில்கள் என மொத்தம் 296 ரெயில்களின் எண்கள் மாற்றி இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com