

பெரம்பலூர்,
பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.குமரிமன்னனை ராணிபேட்டை மாவட்டம், வாலாஜபேட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டிருந்தது. இதேபோல் நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த எஸ்.பார்கவியை பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் குமரிமன்னன் கடந்த 31-ந் தேதி தான் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பணியில் இருந்து விடுவித்து சென்றார். இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பார்கவி பொறுப்பேற்காமல் இருந்தார். இந்த நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனரகம் பார்கவியை தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. ஆனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையர் பதவிக்கு புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. இதனால் பெரம்பலூர் நகராட்சி ஆணையராக பொறியாளர் மனோகர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.