கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்
Published on: 

கரூர்,

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தண்டவாள பராமரிப்பு பணிகள்

ஈரோடு-கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நாளை (செவ்வாய்க் கிழமை) தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கரூர் மார்க்கமாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டை ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்.16846) நாளை (செவ்வாய்க்கிழமை) செங்கோட்டையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்பட்டு வரும்.

இந்த ரெயிலானது கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இருப் பினும் பணிகள் முடிந்தபின்னர் இந்த ரெயிலானது கரூர் - ஈரோடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக புறப்பட்டு செல்லும். இந்த முன்பதிவில்லாத சிறப்பு ரெயில், வழக்கமாக செங்கோட்டை ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்

இதேபோல பாலக்காடு டவுன் -திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்.16844) நாளை காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வரும். இந்த ரெயிலானது தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக கொடுமுடி ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட உள்ளது. இருப்பினும் பணிகள் முடிந்தபின்னர் இந்த ரெயிலானது கொடுமுடி திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலாக புறப்பட்டு வரும். இந்த முன்பதிவில்லாத சிறப்பு ரெயிலானது, பாலக்காடு டவுன் திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

வழித்தட மாற்றம்

கோயம்புத்தூர் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலானது (வண்டி எண்.16322) நாளை கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு வரும். இந்த ரெயிலானது கோவை -திண்டுக்கல் இடையே வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரெயிலானது கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையங்களில் நின்று அதன் வழியாக திண்டுக்கல் சென்றடையும். இதனால் வழக்கமாக நிற்கும் கொடுமுடி, புகழூர், கரூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நிற்காது என தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X