கார்பன் சமநிலையை எட்ட விரைவுபடுத்தவேண்டிய மாற்றங்கள் - சென்னையில் மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை

பயிற்சிப் பட்டறையில் துறைசார் உயர் அலுவலர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பன்னாட்டு அறிவுசார் துணைவர்கள் பங்கேற்றனர்.
சென்னை,
கார்பன் சமநிலையை எட்ட நகர்ப்புறங்களில் விரைவுபடுத்தவேண்டிய மாற்றங்கள் குறித்த மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை சென்னையில் இன்று நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்தியா – UK-PACT (Partnering for Accelerated Climate Transitions) அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய கார்பன் சமநிலையை எட்ட நகர்ப்புறங்களில் விரைவுபடுத்தவேண்டிய மாற்றங்கள் குறித்த மாநில அளவிலான பயிற்சிப் பட்டறை சென்னையில் இன்று நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையில் நம் மாநிலத்தின் பல்வேறு துறைசார் உயர் அலுவலர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பன்னாட்டு அறிவுசார் துணைவர்கள் பங்கேற்றனர்.
இதில் தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்கள் கார்பன் சமநிலையினை எட்ட துரிதப்படுத்தப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஈரோடு மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் UK-PACT அமைப்பால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டன. இந்த பயிற்சிப் பட்டறையானது, இந்தியா – UK PACT அமைப்பால் CEEW, ITDP இந்தியா, ஐ.ஐ.டி. மெட்ராஸ், செனெக்ஸ் மற்றும் TERI ஆகிய நிறுவனங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுவரும் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மற்றும் போக்குவரத்து சார்ந்த திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
இந்நிகழ்வில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுப்ரியா சாஹூ, ஓவைன் ராபர்ட்ஸ், தலைவர், காலநிலை மாற்றக் கொள்கை, பிரிட்டிஷ் ஹைகமிஷன், சாலினி மேடேபள்ளி, இயக்கத் துணைத்தலைவர், பிரிட்டிஷ் ஹைகமிஷன், தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ஆ.ர.ராகுல் நாத் ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.
நகரங்களுக்கான் நிலையான, மீள்திறன்மிகு எதிர்காலத்தை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு மற்றும் யுகே அரசாங்கத்தின் உறுதித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. இந்நிகழ்வின்போது, தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் மற்றும் யுகே PACT அமைப்புகளிடையே நகர்ப்புறத் திட்டம் மற்றும் போக்குவரத்துத்துறைகளில் கரிம நீக்கம் செய்வதற்கான கூட்டாண்மையை உறுதி செய்யும் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வின்போது அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுப்ரியா சாஹூ உரையாற்றுகையில், தமிழ்நாடு அரசு, காலநிலை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த UK அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறது. தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனம் மூலம், நான்கு சிறப்புமிகு இயக்கங்களான பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம் மற்றும் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் ஆகிய இயக்கங்களைச் செயல்படுத்தி வருகிறது. இம்முன்னெடுப்புகள் மீள்திறன்மிகு கார்பன் சமநிலை எதிர்காலத்தை உருவாக்குவதில் அரசு கொண்டிருக்கும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கீழ் டீசல் பேருந்துகளுக்குப் பதிலாக 700 இயற்கை எரிவாயுப் பேருந்துகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது முதல் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளாக உயிர்க் கேடயங்கள் அமைக்கும் திட்டங்கள் என பல்வேறு முன்னோடித் திட்டங்கள் வாயிலாக நிலைத்தகு நகர்ப்புற வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது.
மேலும். பசுமை நகர்ப்புற வளர்ச்சி மற்றும் காலநிலை நிதி போன்ற புதுமையான அணுகுமுறைகள் மூலம் தமிழ்நாடு நிலைத்தகு மற்றும் சார்பன் சமநிலை வளர்ச்சியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த UK PACT திட்டங்களுடன் இணைவதன் மூலம் தூத்துக்குடி மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களை தேசிய இலக்குக்கு முன்னர் கார்பன் சமநிலையினை அடைய செயலாற்றிவரும் நான்கு நகரங்களுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட வேண்டும். இந்த விரிவாக்கம் அளவிடத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய, இந்தியாவின் பிற பகுதிகளிலும், உலகளவிலும் செயல்படுத்தத்தக்க காலநிலைத் தீர்வுகளை வழங்குவதில் அரசு கொண்டுள்ள நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வண்ணம் எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, காலநிலை மற்றும் போக்குவரத்து திட்டங்களுக்கு தரவுகள் மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் ஆகிய தலைப்புகளில் வல்லுனர்களிடையே குழு விவாதம் நடைபெற்றது.
இப்பயிற்சிப் பட்டறையானது காலநிலை நடவடிக்கையில் தமிழ்நாட்டின் தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் நிறுவனத்தினை உருவாக்கக்கூடிய முக்கிய பங்குதாரர்களிடையே ஒருங்கிணைவுகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமைந்தது. மேலும் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் ஐ.ஐ.டி. மெட்ராஸ், TERI, ITDP இந்தியா மற்றும் செனெக்ஸ் ஆகிய நிறுவனங்களால் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்புத் தீர்வுகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெடுப்புகள் காலநிலை நடவடிக்கைகளுக்கான திட்டங்கள், துல்லியமான தரவுகள், தொழில் நுட்பங்கள் மற்றும் நிதி ஆகியவற்றில் ஒரு முன் மாதிரியாகத் திகழும்.
UK PACT அமைப்பானது, இங்கிலாந்து அரசாங்கத்தின், அயலக, காமன்வெல்த் மற்றும் வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர் பூஜ்ஜிய துறையின் நிதியினைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டுவரும் திறன்வளர் திட்ட அமைப்பாகும். இவ்வமைப்பானது ஐக்கிய ராஜ்ஜியங்களின் பன்னாட்டு காலநிலை நிதியினைக் கொண்டு உமிழ்வுகளைக் குறைக்க அதிக வாய்ப்புகளைக் கொண்ட நாடுகளுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தி, அந்நாடுகள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஆதரவினை நல்கி வரும் அமைப்பாகும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






