

சேலம்,
கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சேலம் வழியாக செல்லும் 3 ரெயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கோவை-போத்தனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் (சனிக்கிழமை) போத்தனூரில் இருந்து புறப்பட வேண்டிய போத்தனூர்-தன்பாத் அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16619) போத்தனூருக்கு பதிலாக கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும்.
இதேபோல் நாளை மறுநாள் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் எர்ணா குளம்-பாட்னா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22669) 13-ந் தேதி போத்தனூர்-இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இதனால் இந்த ரெயிலுக்கு கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் அதி காலை 4.35 மணிக்கு வந்து 4.40 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
மேலும், அதே நாளில் மங்களூருவில் இருந்து புறப்படும் மங்களூரு-சந்திரகாச்சி விவேக் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (22852) 13-ந் தேதி போத்தனூர்-இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயிலுக்கும் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக போத்தனூருக்கு காலை 6.24 மணிக்கு வந்து 6.27 மணிக்கு புறப்படும்.
இதேபோல் வருகிற 13-ந் தேதி புறப்படும் நாகர்கோவில்-நியூ ஜல்பைகுரி அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (20604) 14-ந் தேதி போத்த னூர்-இருகூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். மற்ற 3 ரெயில்களை போல இந்த ரெயிலுக்கும் கோவை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தம் இருக்காது. அதற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்துக்கு 14-ந் தேதி காலை 6.32 மணிக்கு வந்து 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மாற்றப்பட்டுள்ள ரெயில் சேவைகளை கருத்தில் கொண்டு பயணத்தை திட்டமிடவும். இவ்வாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.