தேர் விபத்து: வருங்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

தேரின் சக்கரத்திற்கும், சுவருக்கும் இடையே சிக்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேர் விபத்து: வருங்காலங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்
Published on

சேலம்,

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இந்நிலையில், தேரோட்டத்தின்போது ரதவீதியில் தேர் திரும்புகையில் தேரின் சக்கரத்திற்குள் 2 இளைஞர்கள் சிக்கிக்கொண்டனர். தேர் திரும்புகையில் தேரின் சக்கரத்திற்கும் அப்பகுதியில் இருந்த சுவருக்கும் இடையே ஹர்ஷ்வர்தன் என்ற இளைஞரும், சஷ்டிகன் என்ற இளைஞரும் சிக்கிக்கொண்டனர்.

இதில், தேரின் சக்கரத்திற்குள், சுவருக்கும் இடையே சிக்கிய இளைஞர் ஹர்ஷ்வர்தன் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் சஷ்டிகன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.

இளைஞர் உயிரிழப்பு

இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், “நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோவில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (வயது 18), த/பெ.கோவிந்தராஜா, என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

நிவாரணம்

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகன் (வயது 19). த/பெ.கெளரிசங்கர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கவனம்

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் ஹர்ஷவர்தன் குடும்பத்துக்கு அமைச்சர் அருண்ராஜ் ஆறுதல் கூறினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எவ்வளவோ முயற்சிகள் செய்தும் துரதிர்ஷ்ட வசமாக இளைஞரை காப்பாற்ற முடியவில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். முதல்-அமைச்சரின் கவனத்திற்கும் எடுத்துச் சென்றோம். இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி இருக்கிறார். வருங்காலங்களில் தேர் விபத்து போன்றவை ஏற்படாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும். பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்னும் முறைபடுத்துவோம்” என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com