திண்டுக்கல்லில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

திண்டுக்கல்லில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே மைக்கேல் பாளையம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் கழுத்தறுபட்ட நிலையில் வாலிபரும், அவருக்கு அருகில் ஒரு பெண்ணும் பிணமாக கிடந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி விவசாயிகள், கோட்டூர் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகனுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர், இதுதொடர்பாக நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அந்த தோட்டத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

அப்போது கழுத்து அறுக்கப்பட்ட வாலிபரின் கையில் ரத்தக்கரை படிந்த கத்தியும், பெண்ணின் அருகில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில், தண்ணீர் பாட்டில், பூ மற்றும் உணவு பொட்டலங்கள் இருப்பதை போலீசார் பார்த்தனர். இதனால் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இறந்து கிடந்தவர்கள், மைக்கேல்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜீவா (வயது 32) என்றும், அவருக்கு அருகில் பிணமாக கிடந்த பெண் அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் மனைவி ஆலிசா (30) என்றும் தெரியவந்தது. ஆலிசா வீட்டருகே உள்ள தோட்டத்தில் ஜீவா கூலிவேலைக்கு சென்று வந்தார். அப்போது, அவருக்கும் ஜீவாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலானது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்.

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்ததால், அவமானம் தாங்க முடியாமல் 2 பேரும் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக்கு சென்று தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஜீவா தனக்குதானே கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதும், ஆலிசா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டதும் தெரியவந்தது. தற்கொலை செய்த ஆலிசாவுக்கு 13 வயதில் ஒரு மகன் உள்ளான். ஜீவாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திண்டுக்கல்லில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com