

சென்னை,
சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கடந்த 29.05.26 அன்று தென்காசி மாவட்டம், ஆலங்குளம் - நெட்டூர் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடைபெற்ற சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தேன்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்ன குமார், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மருத்துவர் ரேவதி பாலன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டேன். நடைபெற்ற சம்பவம் குறித்தும், இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் விபரம், இன்னும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சை விபரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களுடன், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். நெட்டூர் கிராமத்தில் நிரந்தரமாக ஒரு புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும், தங்கள் பகுதியிலேயே அரசு பொது விநியோகக் கடை, சமூக நலக்கூடம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
உடனடியாக அக்கிராமத்தில் புறக்காவல்நிலையம் அமைக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும், மற்ற கோரிக்கைகளை பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தேன்.
குற்றமிழைத்தவர்களுக்கு விரைவாகவும், உறுதியாகவும் தண்டனை பெற்றுக் கொடுப்பதில் தான், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு அடிப்படையாக அமையும் என்பதை வலியுறுத்தி, வழக்கை விரைந்து நடத்திட காவல்துறைக்கு அறிவுறுத்தினேன். மேலும், முதற்கட்டமாக இந்த வழக்கில் தொடர்புடைய, தொடர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை பரிந்துரைக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்தேன். பாதிக்கப்பட்ட ஒருவருக்கு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் முதற்கட்ட நிவாரணத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கும் அரசின் சார்பில் நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தினேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.