

கன்னியாகுமரி,
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த விரைவு ரெயிலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தமிழகத்தின் நாகர்கோவில் நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், தடை செய்யப்பட்ட போதை மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், இன்று (வியாழக்கிழமை) ரெயில் நாகர்கோவில் சந்திப்பை நெருங்கிய போது, ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து ரெயிலின் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது, ரெயிலின் ஒரு பகுதியில் கேட்பாரற்று மறைத்து வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் மீட்டனர். அதனைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா போன்ற புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அதில் இருந்த 11 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரெயில் நிலையங்களில் போலீசார் சோதனை நடத்துவதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த கடத்தல்காரர்கள், மாட்டிக் கொள்ளாமல் இருக்க குட்கா பைகளை ரெயிலிலேயே போட்டுவிட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த கடத்தலின் பின்னணியில் உள்ள மர்ம நபர்கள் யார், பெங்களூருவில் இருந்து இந்த போதைப்பொருட்களை கடத்தி வந்தது யார், மற்றும் நாகர்கோவிலில் இதனைப் பெற்றுக்கொள்ளவிருந்த நபர்கள் யார்? என்பது குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.