செக்கானூரணி காவல் மரணம்: 3 போலீசாரிடம் விசாரணை நடத்தும் மேஜிஸ்திரேட்டு

லாரி ஓட்டுநர் உயிரிழந்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
செக்கானூரணி காவல் மரணம்: 3 போலீசாரிடம் விசாரணை நடத்தும் மேஜிஸ்திரேட்டு
Published on: 

நாகமலைபுதுக்கோட்டை,

போலீஸ் நிலையத்தில் தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேரில் சென்று மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

லாரியில் தீ

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கப்பன். இவருடைய மகன் பாலகிருஷ்ணன் (வயது 42). இவருக்கு சுதா என்ற மனைவியும், கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மகனும், பிளஸ்-2 படித்துவரும் மகளும் உள்ளனர்.

லாரி டிரைவரான பாலகிருஷ்ணன், அவ்வப்போது சரக்குகளை ஏற்றிக்கொண்டு மதுரை வருவது வழக்கம். அதன்படி கடந்த 3-ந் தேதி தேனி மாவட்டம் தேவாரத்தில் இருந்து ஏலக்காய் மூடைகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி ஓட்டி வந்தார்.

தேனி சாலையில் மதுரை மாவட்டம் வாலாந்தூர் கண்மாய் அருகே வந்தபோது அந்த லாரியில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவியது.

இதுகுறித்து பாலகிருஷ்ணன் உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

செக்கானூரணி காவல் நிலையம்

இந்த சம்பவத்தில் லாரியும், அதில் இருந்த ஏலக்காய் மூடைகளும் சேதம் அடைந்தன. இது குறித்து பாலகிருஷ்ணன் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

லாரியில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வந்தது. இதுதொடர்பான மேல்விசாரணைக்கு வருமாறு பாலகிருஷ்ணனை போலீசார் அழைத்ததின்பேரில் நேற்று முன்தினம் அவர் செக்கானூரணி காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார்.

வக்கீல்கள் உள்ளிட்டோரையும் உடன் அழைத்துச்சென்று இருந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை செய்த போலீசார், மறுநாள் காலையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி அவரை காவல் நிலையத்திலேயே இருக்குமாறு கூறியுள்ளனர். உடன் வந்த வக்கீல்கள் இரவில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

இன்ஸ்பெக்டர் அறை

போலீஸ் இன்ஸ்பெக்டர் அறையில் இரவு முழுவதும் பாலகிருஷ்ணனை வைத்திருந்தார்களாம். நேற்று காலை 6 மணி அளவில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டு இருக்கிறார். அதற்கு அனுமதித்து உள்ளனர். போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற பாலகிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து போலீசார் சத்தம் கொடுத்துள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், கதவை உடனே உடைத்து திறந்தபோது அவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. தான் அணிந்திருந்த சட்டையால் தூக்குப்போட்டு பாலகிருஷ்ணன் தொங்கியதாக கூறப்படுகிறது. பேச்சுமூச்சின்றி கிடந்த அவரை உடனே மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்தபோது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரியவந்தது.

விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு சென்றிருந்த பாலகிருஷ்ணன், அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அறிந்ததும் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தடயவியல் துறையினர் வந்து தடயங்களை பதிவு செய்தனர்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

பேரையூர் குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு ஆனந்தராஜ் நேற்று நேரில் வந்து செக்கானூரணி காவல் நிலையத்தை பார்வையிட்டார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அங்கிருந்து, பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டார். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு வைக்கப்பட்டு இருந்த பாலகிருஷ்ணன் உடலை பார்வையிட்டு, டாக்டர்களிடம் சில தகவல்களை கேட்டறிந்தார்.

முன்னதாக நேற்று காலையில் செக்கானூரணியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் போலீஸ் நிலையம் முன்பு கூடி முற்றுகையிட்டனர். விசார ணைக்கு வந்த நபர் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் தெரிவித்து உள்ளார்.

மேலும் பணியில் கவனக்குறைவாகவும், விதிகளை மீறியும் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முதற்கட்ட நடவடிக்கையாக செக்கானூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீஸ்காரர்கள் பழனிவேல்ராஜன், கலைச்செல்வி ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

காரணம் என்ன?

சம்பவத்துக்கான காரணம் குறித்து பாலகிருஷ்ணனுடன் விசாரணைக்கு சென்றிருந்தவர்களிடம் கேட்டபோது, லாரியில் ஏற்றி வந்த ஏலக்காய் மூடைகள் சில மாயமானதாகவும், அதற்கு அவர்தான் பொறுப்பு என அவற்றை அனுப்பி வைத்தவர்கள் கூறியதாகவும், திடீரென லாரி தீப்பற்றி எரிந்ததால் அவர்தான் தீ வைத்தாரா? என போலீசார் தரப்பில் சந்தேகம் கிளப்பியதாகவும், இதில் ஏற்பட்ட மனவருத்தத்தில் பாலகிருஷ்ணன் தற்கொலை முடிவு எடுத்திருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இதுதான் காரணமா? வேறு காரணம் உள்ளதா? அவர் இரவில் காவல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க போலீசார் மறுத்ததுடன், முழுமையான விசாரணைக்கு பின்பே கூறமுடியும் என தெரிவித்துவிட்டனர்.

உறவினர்கள் மறியல்

பாலகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உறவினர்கள் பிணவறை அருகே திரண்டனர். மேலும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி குடும்பத்தினர், உறவினர்கள் அங்குள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேஜிஸ்திரேட்டு விசாரணை

இந்நிலையில் செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் ஓட்டுநர் உயிரிழந்தது குறித்து 3 போலீசாரிடம் மேஜிஸ்திரேட்டு ஆனந்த் ராஜா இன்று விசாரணை நடத்தினார். இதன்படி ஆய்வாளர், தலைமை காவலர், பெண் போலீசாரிடம் மேஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X