வால்பாறையில் சிறுத்தை அட்டகாசம்

வால்பாறையில் கொட்டகையை சேதப்படுத்தியதோடு கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்துக் கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளார்கள்.
வால்பாறையில் சிறுத்தை அட்டகாசம்
Published on

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பழைய வால்பாறை காபி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராஜ ரத்தினம். இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இந்த மாடுகளை வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பசுமாட்டில் பால் கறக்க சென்றார். பின்னர் பால் கறந்துவிட்டு, கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டார்.

இதையடுத்து ராஜ ரத்தினம் வீட்டீக்குள் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் பசுமாடு கத்தும் சத்தம் கேட்டது. இதனால் வெளியே வந்த அவர் கொட்டகைக்கு சென்றார். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று கன்றுக்குட்டியை கடித்துக் கொன்றதோடு அதன் அருகே நின்று கொண்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதனால் அந்த சிறுத்தை, கொட்டகைகுள் வரும் போது உடைத்து சேதப்படுத்திய வழியே அங்கிருந்து தாவி குதித்து ஓடிவிட்டது. இது குறித்து ராஜரத்தினம் வால்பாறை வனச்சரக வனத்துறையினர் தகவல் கொடுத்தார். வனத்துறையினர் பழைய வால்பாறை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் மீண்டும் சிறுத்தை வருவதற்கு வாய்ப்புள்ளதால் எஸ்டேட் பகுதி மக்கள் கவனமுடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com