

சென்னை,
அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானார். ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த அமைச்சரவையில் பாதுகாப்பு துறை மந்திரியாக தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 54 வயதான அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞரான அனிதா ஆனந்த், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். அனிதா ஆனந்தின் தந்தை தமிழ்நாட்டையும், தாய் பஞ்சாபையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில் கனடா பாதுகாப்புத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்திற்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்டப் பேராசிரியருமான அனிதா கொரோனா தொற்றின்போது கொள்முதல்துறை மந்திரியாக பாராட்டத்தக்க பணிகளை செய்த பிறகு கனடா தேசிய பாதுகாப்புத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரது புதிய பணியில் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.