செக்கானூரணி காவல் மரணம்: 3 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்

காவலர்கள் 3 பேரும் விசாரணைக்காக நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செக்கானூரணி காவல் மரணம்: 3 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்
Published on: 

மதுரை,

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 காவலர்களுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். காவல் ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் காவலர் கலைச்செல்வி ஆகியோர் விசாரணைக்காக நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் உயிரிழந்த ஓட்டுநர்

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி அருகே வாலாந்தூரில் தனது லாரி தீப்பிடித்து எரிந்ததாக செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, விசாரணைக்காக அவரை காவல் நிலைய ஆய்வாளர் அறையில் இரவு தங்க வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த நவம்பர் 14-ந்தேதி அதிகாலை காவல் நிலைய கழிப்பறைக்குச் சென்ற பாலகிருஷ்ணன், அங்கு தூக்கிட்ட நிலையில் மயங்கிக் கிடந்ததாகவும், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

காவல் நிலையத்திற்குள் புகார்தாரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

சம்பவத்தின்போது பணியில் இருந்த செக்கானூரணி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

3 காவலர்களுக்கு சம்மன்

இதையடுத்து, சிபிசிஐடி அதிகாரிகள் வழக்கின் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். காவல் நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்தன்று பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் காவலர் கலைச்செல்வி ஆகிய 3 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்கள் விசாரணைக்காக நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

X