கெலவரப்பள்ளி அணையில் குவியல் குவியலாக பொங்கும் ரசாயன நுரை! விவசாயிகள் அதிர்ச்சி

ரசாயன நுரைகள் அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் விழுகிறது.
கெலவரப்பள்ளி அணையில் குவியல் குவியலாக பொங்கும் ரசாயன நுரை! விவசாயிகள் அதிர்ச்சி
Published on: 

ஓசூர்,

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து மதகுகள் வழியாக குவியல், குவியலாக நுரை பொங்கி தண்ணீர் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கெலவரப்பள்ளி அணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளியின் உச்சபட்ச நீர்மட்டம் 44.48 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 42.48 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 511 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 551 கனஅடி நீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஆற்றில் வெளியேறும் நீருடன் குவியல், குவியலாக ரசாயன நுரைகள் பொங்கி சென்றன. மழைக்காலங்களில் கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் திறந்து விடப்படும் ரசாயன கழிவுகள் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் இது போன்ற ரசாயன நுரைகள் ஆற்றில் பொங்கி செல்வது வழக்கமாக உள்ளது.

விவசாயிகள் வேதனை

அதேபோல் தற்போது கெலவரப்பள்ளி அணை பகுதியில் ஆங்காங்கே ரசாயன நுரைகள் முழுவதுமாக பனி படர்ந்தது போல காணப்படுகிறது. மேலும் காற்று பலமாக வீசுவதால், அந்த ரசாயன நுரைகள் சுழன்று, சுழன்று அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் விழுகிறது.

இதனால் ஆடு, மாடுகள் புற்கள், செடி, கொடி இலைகளை மேயமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணை அருகே தரைப்பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் மீதும் நுரைகள் விழுகின்றன. இதனால் விவசாயிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருவதுடன் மிகவும் வேதனை அடைந்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com