

சேலம்,
சேலத்தில் சாயப்பட்டறையில் இருந்து திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டதால் 50 பேர் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி 47-வது வார்டு குகை தெற்கு முனியப்பன் கோவில் தெருவில் பத்ரிநாதன் என்பவருக்கு சொந்தமான சாயப்பட்டறை உள்ளது. இங்கு ஜவுளிகளுக்கு தேவையான துணி நூல்களுக்கு சாயமிடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பட்டறையில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
நேற்று இரவு வழக்கம் போல் தொழிலாளர்கள் நூல்களுக்கு சாயமிடுவதற்காக ஹைட்ரோ குளோரிக் என்ற ரசாயனம் கலந்து வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது, சாயப்பட்டறையில் இருந்து ரசாயனம் (ஆசிட்) திடீரென கசிய தொடங்கியது. இதனால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே ஓடிவந்தனர் சாயப்பட்டறை அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால் குடியிருப்புகளுக்குள் ரசாயனம் கசிந்ததால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாயப்பட்டறைக்குள் சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து ரசாயன கசிவை கட்டுப்படுத்தினர்.
மேலும், செவ்வாய்பேட்டை போலீசாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே, அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், அடிக்கடி இதுபோன்று சாயப்பட்டறையில் இருந்து ரசாயன கசிவு ஏற்படுவதாகவும், இதனால் கண் எரிச்சல், மூச்சு திணறல் ஏற்படுவதகாவும் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சாயப்பட்டறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் செயல்படுகிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நூல்களுக்கு சாயமிடுதலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரிக்கசிவு எப்படி ஏற்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.