"ஆவின் பால் பாக்கெட் பிலிம்களில் ரசாயன நெடி... 160 ரோல்களை திருப்பி அனுப்பிய மதுரை ஆவின்!"

தரமற்ற பிலிம்களை சப்ளை செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
"ஆவின் பால் பாக்கெட் பிலிம்களில் ரசாயன நெடி... 160 ரோல்களை மதுரை ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது”.
மதுரை ஆவின் பால் பண்ணை
Published on

மதுரை,

மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசியதால் 160 ரோல்களை ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பியது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட ஆவின் நீல நிறப் பால் பாக்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற ரசாயன நெடி வீசியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்களிடமிருந்து பரவலான புகார்கள் எழுந்தன. குழந்தைகள் மற்றும் நோயாளிகள் தினமும் பயன்படுத்தும் பாலில் இத்தகைய நெடி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

உடனடி சோதனை -காரணம்

இந்தப் புகாரைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சாத்தமங்கலம் ஆவின் பால் பண்ணை மற்றும் பல்வேறு விநியோக மையங்களில் அதிரடி சோதனை நடத்தி பால் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், பால் பாக்கெட்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பாலித்தீன் பிலிம் பேப்பர் ரோல்களில் ஏற்பட்ட தரம் மற்றும் குறைபாடே இந்த ரசாயன நெடிக்குக் காரணம் என மதுரை ஆவின் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதிரடி நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து, தரமற்ற பிலிம்களை சப்ளை செய்த ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு ஆவின் நிர்வாகம் மற்றும் பால்வளத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், பண்ணையில் இருப்பில் வைக்கப்பட்டிருந்த ரசாயன நெடி கொண்ட 160 பாலித்தீன் பிலிம் ரோல்களை ஆவின் நிர்வாகம் உடனடியாக ஒப்பந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியது.

தடையற்ற விநியோகம்

தற்போது அந்த தரமற்ற பிலிம்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு, தனியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கான ஆவின் பால் விநியோகம் எவ்வித பாதிப்புமின்றி தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக ஆவின் நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com