

செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருக்கச்சூர் பகுதியில் வசிக்கும், அரசு உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஆனந்தன் என்பவரது வீட்டில், கடந்த டிசம்பர் மாதம் 15 சவரன் நகைகள் திருடுபோனது.
இதுகுறித்த புகாரின் பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய நபர் ஆலந்தூர் பகுதியில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆலந்தூர் பகுதிக்கு சென்ற போலீசார், ஆட்டோவில் சுற்றித் திரிந்த லோகேஷ் என்பவரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த லோகேஷ்(எ) டோரா லோகேஷ் (வயது 28) என்பதும், இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளதும், இவர் தொடர்ந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், அதன்படி, ஆசிரியர் ஆனந்தன் என்பவரது வீட்டில் டிசம்பர் மாதம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர் கொள்ளையடித்து சென்ற நகையை விற்று, அதில் ரூ.2.5 லட்சத்தில் ஒரு புதிய ஆட்டோ வாங்கியதும் தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த புதிய ஆட்டோ மற்றும் 10 கிராம் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.