சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் திருட்டு சட்டசபை செயலகத்தில் புகார்

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் வீடு புகுந்து திருட்டு நடைபெற்றுள்ளதாக சட்டசபை செயலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குடியிருப்பில் திருட்டு சட்டசபை செயலகத்தில் புகார்
Published on

சென்னை,

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், உத்திரமேரூர் சுந்தர் ஆகியோருக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் அவர்கள் தங்களின் குடியிருப்பிற்கு சென்றனர்.

அந்த குடியிருப்பில் இருந்த விலை உயர்ந்த டி.வி., மிக்சி, சமையல் எரிவாயு சிலிண்டர், ஸ்டெபிலைசர் உள்ளிட்ட பல பொருட்களை காணவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழு அலுவலரிடம் (விடுதி நிர்வாகம்) முறையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்டசபை செயலகத்திற்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ய கோரப்பட்டது. ஆனால் அங்கிருந்த கேமரா பல நாட்களாக இயங்கவில்லை என்பது தெரியவந்தது.

எத்தனை நாட்கள் அவை இயங்கவில்லை என்று கோரப்பட்ட போது உரிய பதில் கிடைக்கவில்லை. எம்.எல்.ஏ.க்கள் குடியிருக்கும் வளாகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவே வேலை செய்யவில்லை என்பதை ஏற்க முடியவில்லை.

இதுகுறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை தனிப்பட்ட புகாராக கருதாமல், சட்டசபை செயலகமும் முன்வந்து தனது தரப்பிலும் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com