சென்னை: வாகன சாகசங்களில் ஈடுபட்ட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

அபாயகரமான பயணங்களை தடுக்க கடுமையான அமலாக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வாகன சாகசங்களில் ஈடுபட்ட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
Published on: 

சென்னை,

சென்னை முழுவதும் நடைபெற்ற தீவிர வாகன சோதனையில் 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 3-ம் தேதியன்று நள்ளிரவு நுங்கம்பாக்கம், ஜெமினி, கோடம்பாக்கம், ஐஐடி மேம்பாலம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பைக் ரேஸில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதிக சத்தம் எழுப்பியபடி பைக் சாகசங்களில் அவர்கள் ஈடுபட்டனர். இதற்கிடையே, கல்லூரி மாணவர் குகன்(21) பைக் ரேஸில் ஈடுபட்டு, ஐஐடி மேம்பாலத்தில் இருந்து விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்துக்குள்ளான பைக்கை, பின்னால் வந்தவர்கள் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால், விபத்து நடந்தபோது உடனிருந்தவர்கள் யார், பைக்கை ஓட்டி வந்தது யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களையும் ஆய்வு செய்தனர்.

மேலும் வள்ளுவர் கோட்டம் சிக்னல் அருகே மட்டும் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றாக திரண்டு பைக் சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களில் வாகன சாகசங்களில் ஈடுபட்டவர்கள் உள்பட 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதளபதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை முழுவதும் தீவிர வாகனச் சோதனைகள் - சென்னை போக்குவரத்து காவல்

அபாயகரமான வாகன சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த மூன்று நாட்களில் சென்னை முழுவதும் வாகன சாகசங்களில் ஈடுபட்ட அல்லது பதிவு எண் இல்லாமல் இயக்கப்பட்ட 2,000 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், அபாயகரமான பயணங்களைத் தடுக்கவும் கடுமையான அமலாக்கம் தொடரும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com